Thursday, October 13, 2011
கீழக்கரையில் உள்ள ஏழைகளுக்கு அரசு உதவிகள் எளிதாகக் கிடைக்க உதவி செய்வேன் ! வேட்பாளர் மெகர்பானு
கீழக்கரையில் உள்ள ஏழைகளுக்கு அரசு உதவிகள் எளிதாகக் கிடைக்க உதவி செய்வேன் என்று பொது வேட்பாளர் மெகர்பானு வாக்குறுதி அளித்துள்ளார்.
கீழக்கரை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு கீழக்கரை அனைத்து சமுதாய பொது வேட்பாளர் தேர்தல் பணிக்குழு சார்பில் பொது வேட்பாளரக அறிவிக்கப்பட்டுள்ள நிலவு என்ற மெகர்பானு (48) போட்டியிடுகிறார். 3 -வது வார்டிலுள்ள புதுகிழக்கு தெருவைச் சேர்ந்தவர். மகளிர் மன்ற தலைவியான இவர், 7 -ம் வகுப்பு வரை படித்துள்ளார் இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர் நிருபர்களிடம் கூறியதாவது: கீழக்கரை நகரில் உள்ள பெரும்பான்மை ஜமாத்துகளின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியோர் எனக்கு ஆதரவளிப்பதற்கு நன்றி. அனைத்து சமூகத்தினர் ஆதரவுடன் பொது வேட்பாளராக போட்டியிடுகிறேன். என்னை வெற்றி பெறச் செய்தால் கட்சி சாராமல் அனைத்து சமுதாய மக்களுக்காக பாடுபடுவேன்.
தெருவுக்கு ஒரு புகார் பெட்டி அமைத்து வாரம் ஒரு முறை அந்தப் புகார்களை கவனித்து பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். வாரம் ஒரு முறை நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்துவேன்.
கீழக்கரையில் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீóர் இணைப்புகள் வழங்குவேன். தீராத பிரச்னையாக உள்ள குப்பைகள் மற்றும் கழிவு நீரை அகற்ற பெருமுயற்சி எடுப்பேன். அனைத்து சமுதாய பெரியோர்களையும் அணுகி நகருக்குத் தேவையான உதவிகளை பெற்று கீழக்கரையை மாநிலத்தில் முன்மாதிரி நகரமாக மாற்றுவேன்.
திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை போன்ற அரசு உதவிகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்க உதவுவேன். மாதம் 2 முறை எல்லா வார்டுகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு, மக்கள் குறைகளை உடனுக்குடன் சரிசெய்வேன்.
பெரு நகரங்களைப் போல கீழக்கரையிலும் நவீன முறையில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு கைக்கடிகாரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
அப்போது கீழக்கரை அனைத்து சமுதாய பொது வேட்பாளர் தேர்தல் பணிக்குழு தலைவர் அப்துல் மாலிக், சாகிப், எம்.எஸ். தம்பி, வேலுச்சாமி, 17 -வது வார்டு கவுன்சிலர் முகம்மது காசிம், செய்யது இப்ராஹிம், ராதாகிருஷ்ணன், கிழக்கு தெரு மத்தீன், த.மு.மு.க முன்னாள் நிர்வாகி சிராஜ், தெற்கு தெரு ஜமாத் உதவி செயலாளர் பவுசுல் அலி ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்...
கீழக்கரை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு கீழக்கரையில் உள்ள பெரும்பாலான ஜமாஆத்களின் ஆதரவுடன் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நிலவு (என்ற) எஸ். மெஹர்பானுவிற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அவருக்கு கை கடிகாரச் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிப் பெற வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
குப்பைகளும், சாக்கடைகளும் எங்குப் பார்த்தாலும் நீக்கமற கீழக்கரையில் காணப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் மீண்டும் பதவிக்கு வருவதற்கு முயலுகிறார்கள். கீழக்கரையின் அவலம் நீங்க, கீழக்கரை தூய்மை அடைய மனிதநேய மக்கள் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் எஸ். மெஹர்பானுவிற்கு தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.