Tuesday, October 1, 2013

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா !

 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வா தர்ஹாவின் 839ம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக்கூடு விழாவாக அறிவிக்கப்பட்டு செப்.7ம் தேதி மவுலீதுடன் துவங்கியது. இதையடுத்து கடந்த 17ம் தேதி கொடி ஏற்றப்பட்டது. கடந்த 22 நாட்களாக தினமும் மாலை 6 மணி முதல்  மவுலீது ஓதினர். முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் காலை (செப்.29ல்) துவங்கியது. கைத்தறி துறை அமைச்சர் சுந்தரராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு தர்காவில் சிறப்பு பிராத்தனை செய்தனர்.
 
நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏர்வாடி குடியிருப்பு பகுதியில் உள்ள சந்தனக்கூடு தைக்காவிலிருந்து கரைத்த சந்தனம் வெள்ளிக் குடத்தில் எடுத்து கொண்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம் (சந்தனக்கூடு) யானை, குதிரை அணிவகுக்க வாணவேடிக்கைகள், தாரை தப்பட்டைகளுடன் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலம் புறப்பட்டது. அதிகாலை 5 மணியளவில் தர்கா வந்தடைந்த கூடு தர்காவை மூன்று முறை வலம் வந்தது.
 
அங்கு உலக நன்மை வேண்டி மாவட்ட காஜி சலாஹூதீன் ஆலிம் சிறப்பு துவா(பிரார்த்தனை) ஓதினார். இதன் பின்னர்  தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அம்ஜத் ஹூசைன் தலைமையில் செயலர் செய்யது பாரூக் ஆலிம், துணைத்தலைவர் செய்யது சிராஜூதீன், நிர்வாகிகள் சர்தார் ஆலிம், அஜ்மல் ரஹ்மான், சாதிக் பாட்ஷா, அகமது இபுராகிம், துல்கருணை பாட்ஷா லெவ்வை உள்ளிட்டோர் முன்னிலையில் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கடந்த சில வாரங்களாக தர்காவில் வந்து தங்கியிருந்தனர். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
 
எஸ்.பி மயில்வாகனன் மேற்பார்வையில் கீழக்கரை டிஎஸ்பி சோமசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கணேசன் (கீழக்கரை), முத்துராஜா (ஏர்வாடி) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பில் உதவினர். தர்கா வளாகத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா ஆலோசனையின் பேரில் குடிதண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை துணைத்தலைவர் ரகுமத்துல்லா, ஊராட்சி செயலர் அஜ்மல்கான் மற்றும் ஊழியர்கள் செய்தனர். அக்.6ம் தேதி மாலை 5.30 மணியளவில் கொடி இறக்கப்பட்டு பக்தர்களுக்கு (தப்ரூக்) நெய் சாதம் வழங்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.