Saturday, October 19, 2013

பாலை தேசத்து கீழைவாசிகள்... பகுதி 1 ! கட்டுரையாளர் : கீழை ராஸா என்ற ராஜாக்கான்பாலை தேசத்து  கீழைவாசிகள்
வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு... கீழை ராஸா

இன்று நாம் வாழ்வது சொகுசான வெளிநாட்டு வாழ்க்கை, மனைவி, பிள்ளைகள் நம் அருகில், நினைத்த மறுநொடியே சொந்தஊருக்கு நம்மால் பறக்கமுடிகிறது. வயசான வாப்பா சிரிப்பதை அந்த நொடியே ஸ்கைப்பில் பார்க்க முடிகிறது…. மிளகு தண்ணி ஆனம் எப்படி செய்வதென்று அம்மாவிடம் வாட்ஸ் அப்பில் கேட்க முடிகிறது… என்ன மச்சான் இன்னும் தூங்கலையான்னு நடுநிசியில் நண்பனுடன் ஃபேஸ்புக்கில் கதைக்க முடிகிறது… இன்று உலகம் மிகவும் சுருங்கிவிட்டது… இன்று நாம் வாழ்வது சொகுசு வாழ்க்கை…

ஆனால் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்.., வெளிநாட்டு வாழ்க்கை இத்தனை இலகுவானதாக இல்லை… இன்று நாம் வாழும் சொகுசு வாழ்க்கையை அவர்கள் சந்தித்திருக்க வில்லை… வெளிநாட்டில் ஜீரோவாக வாழ்க்கை இருந்தாலும் உள்ளூரில் ஹீரோவாக நம்முள் வலம் வந்த நம் ஹீரோக்களின் வாழ்க்கை முறையை, கீழக்கரை பகுதியை சார்ந்து அவர்கள் சம்பந்தமான நினைவுகளை, அவர்கள் சந்தித்த துயரங்களை, அவர்கள் செய்த நையாண்டிகளை… சுவாரஸ்யமான முறையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கமே, இந்த தொடர் கட்டுரைக்கான காரணம்…

இது நான் சந்தித்த, கேட்டறிந்த எந்தனையோ அனுபவங்களின் தொகுப்பு, இதை வாசிக்கும் போதெல்லாம் நீங்கள் சந்தித்த எத்தனையோ ஹீரோக்கள் உங்கள் ஞாபகத்தில் வந்து செல்வதை உங்களால் தடுக்க இயலாது… முடிந்தவரை பின்னூட்டத்தில் இது சம்பந்தமான உங்கள் அனுவங்களை பதிவு பண்ணுங்கள்…சேர்ந்து பேசலாம்…
அன்புடன்
கீழைராஸா


“தம்பி என்ன பண்ணிக்கிட்டிருக்கிறீக”

“ஃபாரினுக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன் காக்கா”

இந்த வசனம் எங்கள் பகுதியில் ரொம்ப ஃபேமஸான வசனம்.
சும்ம இருக்கிறேன் என்பதை பயபுள்ளே எவ்வளவு பகுமானமா* சொல்லுது பாருன்னு அந்தக் கேள்வியை கேட்டவர் மனதுக்குள் நினைத்துக் கொள்வது வேறு விசயம்.

ஆமாங்க உலகத்துலேயே சும்மஇருக்கிறதுக்கு பகுமானமா* “ஃபாரினுக்கு ட்ரை பண்ணுறேன்”னு சொல்லுற பெருமை பிடித்த ஊரு, எங்க ஊருதாங்க...

மதி தெரிந்த வயசுலே இருந்து இராமநாதபுரம், மதுரை, மதராஸ், இந்த ஊர்களின் பெயர்கள் எவ்வளவு சாதாரணமாக எங்கள் பழக்கத்தில் இருந்தனவோ அதேஅளவு, துபாய், சவூதி, மஸ்கட் இப்படியான பெயர்களும் சர்வ சாதாரணமான புலக்கத்தில் இருந்த ஊர் எங்கள் ஊர் என்பதின் மூலம் எங்களுக்கான வெளிநாட்டுத் தொடர்புகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மாதத்தில் நான்கு நாட்கள், வெளிநாட்டிருந்து வருவதும், வெளிநாட்டிற்கு செல்வதுமாக பார்த்து பார்த்து, சம்பாதிப்பது என்றாலே, அது வெளிநாட்டில் தான் சாத்தியம் என்று எண்ணும் அளவிற்கு வெளிநாட்டு தாக்கம் எங்களூரில் ஏராளம்.

சின்ன வயசில், துபாயிலிருந்து சொந்தக்காரர்கள் வருகிறார்கள் என்றாலே கொண்டாட்டம்தான்.. (ஆனா, அவங்களுக்கு திண்டாட்டம் என்பது புரியாதவயசு..:-) ) அவர் வருவதற்கு இரண்டுநாட்களுக்கு முன்னரே களை கட்ட ஆரம்பித்து விடும்,
வேன் பிடித்து சொந்தம் பந்தங்கள் புடை சூழ திருவனந்தபுரம் செல்லுவோம். அப்போதே, அவர்களை கூப்பிடவில்லை, இவர்களை கூப்பிடவில்லை, என்ற பிரச்சனை ஆரம்பித்து விடும்.

திருவனந்தபுரத்தில் ரூம் போட்டு தங்கி பீமா பள்ளி எல்லாம் சென்று விட்டு ஏர்போர்ட் சென்று சம்பந்தப்பட்ட நம்ம ஹீரோவை வரவேற்போம்.
அவர் வந்ததிலிருந்து ஊர் செல்லும் வரை துபாய் கதை உட்பட, ஏர்போட்டில் டூட்டி போட்ட கதைகள் தான் ஓடும்….

“ வெளிநாட்லே ஒரு செக்கிங்கும் இல்லை ஆனா இங்கே பணம் வாங்குறதுக்குன்னே அழையுறானுங்க ..”

“அட்டை பெட்டியை பிரின்னு நின்னுட்டான், ரெண்டு செண்ட் பாட்டலை கொடுத்தப்புறம் தான் விட்டான்”

இப்படியாக பல வசனங்கள் கேட்டு கேட்டு காது புளித்து போகும்.
இடையில் சாப்பிட செல்லும் போது துபாயில் ஒரே மட்டம் சிக்கன்னு தின்னு நாக்கு செத்து போச்சி மச்சான்… நல்ல வெஜிடேரியன் ஹோட்டலா போங்கன்னு நம்ம ஹீரோ சொன்னதும் “அடப்பாவி” என்று என்று சொல்ல வேண்டும் போல இருக்கும்… என்ன செய்ய..? அவர் தானே செலவு செய்யப் போகிறார்.. என்று எல்லோரும் அமைதி காப்பார்கள்…

இடையில் அவ்வப்போது  555, மால்ப்ரோ என்று ஃபாரின் சிக்கரெட்டை ஊதித் தள்ளியபடி இங்கெல்லாம் ஒரே சத்தம்… ஒரே தூசி, எப்படித்தான் இருக்கிறீங்களோன்னு அடிக்கடி சலித்து கொள்வார்.

இதுலே பரிதாபத்திற்குரியவர் நம்ம ஹீரோவின் மனைவி தான்… வருடக்கணக்கில் காத்திருந்து நேரில் பார்த்ததும் ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலையில் தத்தளிப்பதை உடன் சென்ற யாரும் உணரமாட்டார்கள்…

வீடு வந்ததும் ”பெட்டி பிரிப்பது” என்பது ஒரு பெரிய வைபவமாகவே நிகழும். சொந்த பந்தங்களிலுள்ள முக்கியமானவர்களெல்லாம் அழைக்கப்படுவார்கள்… ஆனால் கால காலமாக இந்த பெட்டி பிரிப்பதற்கு முன் இருந்த சந்தோசம் பெட்டி பிரித்த பின் இருந்ததாக சரித்திரமே இல்லை… நமக்கு கிடைத்த பொருட்களை விட மற்றவர்களுக்கு அதிகம் கிடைத்துவிட்டதே என்ற ஆதங்கம், பாரபட்சமில்லாமல் எல்லோர் முகத்திலும் காணப்படும்…அதன் பின் சில வீடுகளில் வாய் தகராறு கூட நடக்கும்,

அதோடு நம்ம ஹீரோ ஏண்டா ஊருக்கு வந்தோம் என்ற நிலைக்கு தள்ளப் படுவார்….

ஆனால் இதில் ஒரு சுவாரஸ்யமான விசயம் என்றால் இதெல்லாம் வீட்டில் தான்… வெளியே அப்படியே தலைகீழ்… கையில் ஒரு பிரேஸ்லெட் இரண்டு பவுனில் ஒரு மோதிரம்.. கழுத்தில் ஒரு முறுக்குச் செயின் போட்ட படி கைக்குட்டையை ஒரு செண்ட் பாட்டிலில் போட்டுத் துவைத்து, அதை கொண்டு முகத்தில் மூடிய படி வெள்ளையும் சுளையுமாக அவர் வீட்டை விட்டு கிளம்ப, சந்தெல்லாம்* செண்ட் மணம் வீசும்.

மட்டமான வயசுல்ல பிள்ளைகளுக்கெல்லாம் இவர் யாரென்று தெரியாது என்பதால்  “யாரும்மா இந்த மாமா” என்று கேட்க, அந்தப் பிள்ளைகளுக்குத் தெரிந்த ஹீரோ வீட்டில் உள்ள பிள்ளைகள் பேர் சொல்லி, “அவ மாமாடி”, “அவ வாப்பாடி” என்று அறிமுகப்படுத்த வேண்டிய அளவிற்கு தலை முறை உறவுகளை தொலைத்த நம்ம ஹீரோ… அந்தத் தெருவே அவருக்கு சொந்த மென்று நடக்க பூச்சாண்டியை பார்ப்பது போல பிள்ளைகள் பயந்து ஓடும்… என்றாலும் சலாத்தி*  மறைவிலிருந்து தெருவாசி பெண்களால் ”சோமா இருக்கீயளா சாச்சா..?” ”சோமா இருக்கியளா காக்கா,” அப்படின்னு பல உறவுகளில் விசாரிக்கப்பட, நம்ம ஹீரோ புன் முறுவலுடன் “நல்லா இருக்கேம்மா” என்ற படி காற்றில் பறந்து சென்றாலும், அதில் பலர் யாரென்று அவருக்கே தெரியாதென்பது வேறு விசயம்.

இவை எல்லாவற்றிற்கும் காரணம் அன்றெல்லாம் ஒருவர் வெளிநாடு சென்று விட்டால், குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் கழித்து தான் ஊருக்கு வருவார்கள் என்பது கூடுதல் செய்தி.

உறவுகள் விசயத்தில் வெளியே அப்படியென்றால் வீட்டிற்குள் அவர் நிலைமை படு மோசம்… சொந்த பிள்ளை அவரை மாமா என்றழைக்கும் கொடுமையை என்ன வென்று சொல்ல, கண் முன் நிற்கும் போதே போட்டொவை பார்த்து ”வாப்பா” என்பதும், பிள்ளையை ஆசையுடன் தூக்க சென்றால், பிள்ளைகள் தெரித்து ஓடுவதும்.அன்றைய வெளிநாட்டு வாசிகள் எதிர் கொண்ட உச்ச கட்ட பரிதாபம்.

மாலை யானால் நம்ம ஹீரோ கையில் மஞ்சள் நிற டார்ச் லைட் வந்து ஒட்டிக் கொள்ளும் சூரியனுக்கே லைட் அடிக்கிற வேலையில்லாம் நம்ம் ஹீரோகிட்டெ தான் கற்று கொள்ள வேண்டும் .டீக்கடையில் அவர் அமர்ந்தார் அவரை சுற்றி ஒரு கூட்டம் அவர் கூறும் கதைகளை ஆ வென்று வாய் திறந்த படி கேட்டுக் கொண்டிருக்கும்.

இந்த நிலை இரண்டு மாதங்கள் ஓட மூன்றாவது மாதம் வந்ததும் நம்ம ஹீரோவுக்கு இலையுதிர் காலம் ஆரம்பித்து விடும்...மோதிரம், செயின் என்று ஒவ்வொன்றாக அடகு கடைக்கு இடம் மாறும்.. வாங்கி வந்த டி.வி. உட்பட பெரிய ஆம்ப்ளிபையர் வைத்த டேப்ரிக்கார்டுகள் வெளிநாட்டு கடைகளுக்கு  அடிமாட்டு விலையில் விற்கப்படும்..செலவு பண்ண காசு வேண்டுமல்லவா..?

இது தான் இப்படி என்றால் வீட்டில் தடப்புடலாக பரிமாறப்பட்டு வந்த சாப்பாட்டிலும் படிப்படியாக மாற்றம்.. வந்த புதுசில் நெய்சோறு, கறியானம், பொறிச்ச கறி, தாளிச்சா, துணைக்கறி, இப்படி பரிமாறப்பட்ட டிஸ்கள் நாளாக நாளாக வெறும் சோறும், ஆனமும் என்ற நிலக்கு மாற நம்ம ஹீரோ களை இழந்து போவார்.

அடகு கடையில் வைத்த நகைகளை விற்று நம்ம ஹீரோ ஒரு வழியாக துபாய் செல்ல ஃபிளைட் ஏறுவார்...இனி இந்தப்பக்கமே வரக்கூடாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு பல சபதங்கள் எடுத்த படி பயணம் கிளம்பினாலும் இன்னும் நான்கு வருடம் கழித்து இதே கதை ஆரம்பத்திலிருந்தே தொடரும்...

இன்னும் வரும்......


11 comments:

 1. சொந்த பிள்ளை அவரை மாமா என்றழைக்கும் கொடுமையை என்ன வென்று சொல்ல, கண் முன் நிற்கும் போதே போட்டொவை பார்த்து ”வாப்பா” என்பதும், பிள்ளையை ஆசையுடன் தூக்க சென்றால், பிள்ளைகள் தெரித்து ஓடுவதும்.அன்றைய வெளிநாட்டு வாசிகள் எதிர் கொண்ட உச்ச கட்ட பரிதாபம்.////இந்த வரிகளை படிக்கும்போது ஏனோ மனசு ரொம்ப கஷ்டமாகிப்போச்சு...தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்...கீழக்கரையாக இருக்கட்டும் மாயுரமா இருக்கட்டும் ..நம்மவர்களின் கதி இதான்...

  ReplyDelete
 2. இதில் இன்னுமொரு பரிதாபத்திற்குரிய விசயம் என்னவென்றால்? நம்ம ஹீரோ துபாய் புறப்படும்பொழுது உள்ளூரிலோ அல்லது சென்னையிலோ பிழைப்பு நடத்தும் உள்ளூர்வாசிகளிடம் கடன் வாங்கிச்செல்வதுதான்.

  ReplyDelete

 3. என் இளைய நண்பர் ராசாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  எப்படி இப்படியெல்லாம் உங்களால் எழுத முடிகிறது.

  படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. அத்தனையும் உண்மை.

  முன்பெல்லாம் துபாய் வாழ்க்கையில் நாங்கள் பட்ட சிரமங்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது உங்கள் கட்டுரை.

  வாழ்த்துக்கள். இதுபோல் சுவாரஸ்யமான கட்டுரைகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

  அன்புடன்: ஷாஜஹான்

  ReplyDelete

 4. என் இளைய நண்பர் ராசாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  எப்படி இப்படியெல்லாம் உங்களால் எழுத முடிகிறது.

  படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. அத்தனையும் உண்மை.

  முன்பெல்லாம் துபாய் வாழ்க்கையில் நாங்கள் பட்ட சிரமங்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது உங்கள் கட்டுரை.

  வாழ்த்துக்கள். இதுபோல் சுவாரஸ்யமான கட்டுரைகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

  அன்புடன்: ஷாஜஹான்

  ReplyDelete
 5. தங்கள் கருத்துகளுக்கு என் அன்பான நன்றிகள்...உங்கள் அனைவரின் கருத்துகளுடன் கூடிய தொடர் ஆதரவுதான், என்னை அசராமல் எழுத வைக்கும் ...உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...தொடர்ந்து படியுங்கள்...உங்கள் கருத்துகளை பகிருங்கள்....

  ReplyDelete
 6. எ ராஸா என்னாம்மா சொல்லிருக்காரு, அப்படியே ராஸா வாழ்க்கையை படம் புடிச்சி காத்துனமாதிரி.
  அப்துல் மாலிக் - அதிரை

  ReplyDelete
 7. எ ராஸா என்னாம்மா சொல்லிருக்காரு, அப்படியே ராஸா வாழ்க்கையை படம் புடிச்சி காத்துனமாதிரி.
  அப்துல் மாலிக் - அதிரை

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.