Wednesday, October 23, 2013

பாலை தேசத்து கீழைவாசிகள்- பகுதி 2 ! கட்டுரையாளர் :- கீழை ராஸா என்ற ராஜாக்கான்!


பாலை தேசத்து  கீழைவாசிகள்- பகுதி 2
வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு..                       2
SKYPE, WHATSUP, FACEBOOK. GOOGLE+, சமூக வலை தளங்களுக்கு கட்டுண்டு வாழும் இன்றைய இளம் தலை முறையினர் பலருக்கு இந்த அத்தியாயம் ஒரு ஆச்சரியத்தை அளித்தால் அது மிகையில்லை..ஆம் இன்று நாம் நினைத்த நொடியே நினைத்த நபருடன் தொடர்பு கொள்ளக் கூடிய கால கட்டத்தில் உள்ளோம்..
ஆனால் அன்று அப்படி இல்லை....

உணர்வுகள் ஆசாபாசம் எல்லாம் கடிதம் வழியாகத்தான், ஒரு கேள்வி கடிததத்தில் கேட்கப் பட்டால் அதற்கு பதில் கிடைக்க ஒரு மாதம் கூட ஆகலாம்..ஆனால் அந்த காத்திருப்புகளின் சுகம் மிகவும் இனிமையானது.ஒரு முத்தத்தை கடிதத்தில் அனுப்பி விட்டு பதில் கடிதத்தில் வரும் அவளின் எழுத்துக்களின் வெட்கத்தை காண, நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும்.

அப்புறம் கேசட்டில் பேசி அனுப்பும் ஒரு வகையான தகவல் பரிமாற்றம் வந்தது. குரல் கேட்க கூட்டமாக டேப்ரிக்கார்டர் முன் உட்கார்ந்திருப்பார்கள்.எல்லா உறவுகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் பேச வேண்டும் ஒளிவு மறைவுக்கு இடமில்லை.

உறவினர்கள் திருமணங்கள், பெருநாட்கள், சந்தோசம், துக்கம் இவையெல்லாமே ஒரு பக்க கடிதத்திலும், ஒரு 60 நிமிட கேசட்டிலும் மட்டுமே பதியப் பட்டு காலக்கரையான்களால் அரிக்கப்பட்டு மரித்து போகக் கூடிய மௌன வரலாறுகள்.
அடுத்து தொலை தொடர்பு வரலாற்றின் மைல் கல்லான டெலிபோன் வருகை நம் ஹீரோக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்றாலும்..அப்போதெல்லாம் ஒரு போன் பண்ண எக்ஸேஜ்  செல்ல வேண்டும். பல மணி நேர காத்திருப்புக்கு பின் லைன் கிடைக்கும் ”ஹலோ ஹலோ” என்ற வார்த்தையுடன் கட்டாகி விடும்...மீண்டும் காத்திருப்புகள்...ஆனால் இதற்காக ஒரு பெரும் தொகையை செலவழிக்க வேண்டியிருக்கும் என்பது ஒரு கூடுதல் செய்தி எனினும் பல முறை ஹலோ என்ற வார்த்தைகளுடனே சம்பாசனைகள் முடிந்து விடும்.

அதன் பின் வந்த “உண்டியல் கால்” நம் ஹீரோக்கள் வயிற்றில் பாலை வார்த்தது. ஆம் உண்டியல் கால் பல நாடுகளில் இருந்து மூன்றாம் நபரால் லைன் கொடுக்கப்படும். ஒரு வகையான தொலை தொடர்பு... இதற்கு தண்ணிக்கால் என்றும் ஒரு பெயர் உண்டு. சாதாரண தொலை தொடர்பு சேவையில் ஊருக்கு 10 நிமிடங்கள் பேசினால் இதில் 30 நிமிடங்கள் பேசலாம்...என்னிடம் கேட்டால் இதைத்தான் சேவை மையம் என்பேன்...

கீழக்கரை பகுதியில் கல்யாணத்திற்கு வீடியோ எடுப்பது என்ற ஒன்று ஆரம்பிக்கப் பட்டதே நம்ம ஹீரோக்களை மனதில் வைத்து தான். சூட்டிங்கே பார்க்காத தயாரிப்பாளர் நம்ம ஹீரோ தான்.ஆமாம் லட்ச கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் தன் தங்கை கல்யாணத்தை கூட நேரில் பார்க்க இயலாத பரிதாபத்திற்குரியவர்கள் தான் நம் ஹீரோக்கள்... லீவு கிடைக்க வில்லை, அடுத்த தங்கச்சி கல்யாணம்,கல்யாண செலவுக்கு பணம் போத வில்லை, கடன் அடைக்க வேண்டும், இப்படியான எத்தனையோ காரணங்கள் அவர்களை கல்யாணத்தில் கலந்து கொள்ள இயலாமல் செய்து விட்டாலும், இரண்டு மணிநேர வீடியோ கேசட்டை திரும்பத்திரும்ப பார்த்து, யாருக்கும் தெரியாமல் கழிவறை கண்ணாடி முன் நின்று, உதிர்க்கும் ஒரு துளி கண்ணீரில் அவர் துன்பம் முழுதையும் உளுக்கி விட்டு, அடுத்த கடமைக்கு உழைக்க கிளம்புவாரே அது தான் நம்ம ஹீரோக்களின் மிகப் பெரிய பலம்.

நம்ம ஹீரோக்கள் எப்போதும் தன் குடும்பத்தினர் சொகுசாக வாழ வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள் என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் அவர்களுக்கான சொகுசு வாழ்க்கையில் எந்த குறையும் வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள்...அதற்கு எவ்வளவு கடன் பட்டாலும் பரவாயில்லை.

அது டெலிவிசன் மார்கெட்டில் வந்த நேரம், உள்ளூர் வாசிகள் இன்சால்மெண்டில் டயோனரா, சாலிடர். பி.பி.எல், போன்ற கருப்பு வெள்ளை டெலிவிசன்களை வாங்கி கொண்டிருந்த வேளை, வெளிநாட்டிலிருந்து சோனி கலர் டெலிவிசனை இறக்குமதி செய்து கஸ்டம்ஸ்களை டரியல் செய்த பெருமை நம் ஹீரோக்களையே சாரும்.
அபோதெல்லாம் இது போன்ற நினைத்த நேரத்தில் நினைத்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சேட்லைட் சேனல் இல்லை. மொட்டை மாடியில் டெலிவிசன் ஆண்டனாக்களை மாட்டி விட்டு, எப்போது நிகழ்ச்சி வருமென்று காத்திருந்த தருணங்கள் ஏராளம்.அவ்வபோது சில இந்தி நிகழ்ச்சிகள் வரும். தமிழை 
டெலிவிசனில் முதன் முதலில் பார்த்தது, ரூபவாஹிணியில் தான்.

ரூபவாஹிணி ஒரு இலங்கை சேனல்...ஆய்பவன், வணக்கம் என்று அவர்கள் வாசிக்கும் செய்திகள், சேனல் மாற்ற வழியில்லாததால் வாய் பிளந்து பார்க்க வைத்தது. கிரிக்கெட் வர்ணனை கூட தமிழில் வரும்...”முதலில் துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருக்கும் இந்திய அணி, 20 ஓட்டங்கள் பெற்றுள்ளது...” என்ற தமிழ் வர்ணனையை இன்றும் மறக்க இயலாது...ஆனால் இதெல்லாம் அவ்வப்போது தான்.சிறு தூறல், சற்று பலத்த காற்று இப்படி எது வந்தாலும் உடனே புஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் சேனல் கட்டாகி விடும்.

அடுத்து தூர்தர்ஷன், ஞாயிற்று கிழமை தோறும் ஒரு தமிழ் படம் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு தமிழ் பட பாடல்களான ஒளியும் ஒலியும் என்ற நிகழ்ச்சிகளை அறிமுகம் படுத்த, நம்ம ஹீரோக்கள் கொண்டு வந்த டெலிவிசன்களுக்கு சற்று மவுசு கூடியது.

இன்று, நினைத்த பாடலை, நினைத்த மறு நொடியே பார்க்கும் வாய்ப்புகள் கொண்ட காலகட்டத்தில் நாம் இருந்தாலும், அன்று ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் ஆறு பாடலுக்காக ஒரு வாரம் முழுதும் காத்திருந்து, நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து ரசித்துப் பார்த்த அந்த தருணத்து சுவாரஸ்யம் இன்றைய இயந்திர வாழ்வில் இல்லை என்றே தோன்றுகிறது.

அப்போதெல்லாம் ஞாயிற்று கிழமையும், வெள்ளிக்கிழமையும் தெருவே வெறுச்சோடி போய் கிடக்கும்...இன்று போல் எல்லோர் வீட்டிலும் டெலிவிசன் கிடையாது. ஹீரோக்களின் வீட்டில் தான் பெரும்பாலும் இருக்கும். அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரும் ஒரு வீட்டில் ஒன்று கூடி நிகழ்ச்சிகளை பார்ப்பார்கள்...அன்று இடியப்பகார*, அப்ப காரா* வீடுகளுக்கு அடுத்து ஊர்பலாய்* அதிகம் பேசப்படுவது இங்கே தான்.

அடுத்து VCR காலம்... நமக்கு பிடித்த படத்தை நம் விருப்பத்திற்கிணங்க, நாம் விரும்பிய நேரத்தில் பார்க்க கண்டுபிடிக்கப் பட்ட ஒரு சிறந்த சாதனம் விசிஆர்..
“ஏங்க அவ்வூட்டு லாத்தா மாப்புளே புதுசா எதோ பொட்டி கொண்டு வந்திருக்காங்க, கேசட்டை போட்ட நாம நெனச்ச படத்தை பார்க்கலாமாம்...சின்னவன் ஒரே அங்கே தான் போய் கிடக்குறான்..”

இந்த ஒரு வசனம் போதும், நம்ம ஹீரோக்களை உசுப்பேத்த, அடுத்து எப்பாடு பட்டாகினும், ஒரு மாசத்துக்குள் அந்த பொட்டி வீடு வந்து சேர்ந்து விடும்.
இது தான் இப்படி என்றால் அந்த நேரத்தில் தான் வாடகை வீடியோ கான்சப்ட் ஆரம்பிக்கப் பட்டது. ஹீரோக்கள் இல்லாத வீடுகளில் நாங்களும் குறைந்தவர்கள் இல்லை என்று வாடகை வீடியோ கடையில் வீடியோ எடுத்து பார்பார்கள். ஒரு சந்தில் வசிப்போர்* ஒன்று சேர்ந்து காசு வசூலித்து டெலிவிசன், வீடியோ வாடகைக்கு எடுத்து எல்லோரும் ஒன்று கூடி பார்ப்பார்கள். இதில் கொடுமை என்னவென்றால் ஒரே இரவில் தொடர்ந்து விழித்திருந்து மூன்று, நான்கு படங்களை பார்ப்பது தான்...

எனக்குத் தெரிந்து விதி, கன்னிப்பருவத்திலே, முந்தானை முடிச்சி,16 வயதிலே, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் தான் கேசட்டில் மிக பிரபலம்...
அதைத் தொடர்ந்து ஊரில் ஆங்காங்கே கேசட் வாடகை கடைகள் தோன்றியது..எங்க ஊரைப் பொருத்தவரை முதன் முதலில் ஒரு தொழில் ஆரம்பிக்கத்தான் எல்லோரும் தயங்குவார்கள்.. ஒருவர் ஆரம்பித்து அது வெற்றி பெற்று விட்டால் அதைத் தொடர்ந்து குறைந்தது ஐந்து பேராவது அதை உடனே ஆரம்பித்து விடுவார்கள்...இதுதான் எங்களின் பலமும் பலவீனமும்.

என்ன மக்களே..! தொடர்ந்து தகவல் சம்பந்தப்பட்ட தகவல்களை கேட்டு கேட்டு போரடிக்குதா...அடுத்து வருவது நம்ம ஹீரோக்களின் காதல் வாழ்க்கை பற்றிய அத்தியாயம்...என்ன இப்பவே கனவுகளுக்கு போய் விட்டீர்களா..அதே ரொமாண்டிக் லுக்குடன் சற்றே காத்திருங்கள்...

தொடர்ந்து பேசுவோம்...

கட்டுரை முதல் பகுதியை பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்....
http://keelakaraitimes.blogspot.ae/2013/10/blog-post_432.html

4 comments:

  1. தொடருங்கள் ..காத்திருக்கிறேன்...வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் 4 புதிய பாடல் 2 பழைய பாடல் ஒலிபரப்பாகும்..ஏதேனும் விஷேச தினம் வந்தால்(சுதந்திர தினம்,குடியரசு தினம்) புது பாடலுக்கு ஆப்பு...டொய்ங்க்க்க்

    ReplyDelete
  2. தங்கள் கருத்துகளுக்கு என் அன்பான நன்றிகள்...உங்கள் அனைவரின் கருத்துகளுடன் கூடிய தொடர் ஆதரவுதான், என்னை அசராமல் எழுத வைக்கும் ...உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...தொடர்ந்து படியுங்கள்...உங்கள் கருத்துகளை பகிருங்கள்....

    ReplyDelete
  3. நம்ம ஹீரோ ஒரு கேள்வியை கடிதத்தில் கேட்டால் அதற்கு பதில் கிடைக்க ஒரு மாதம் கூட ஆகலாம்.சில சமயம் ஹீரோ துபாயிலிருந்து ஒரு கடிதம் அனுப்புவார், அதன்பிறகு சில பிரச்சனைகளால் வேலையை விட்டுவிட்டு
    ஊர் வந்தபிறகு அவர் அனுப்பிய கடிதத்தை அவர் கையாலயே தபால்காரரிடமிருந்து வாங்கும் பரிதாப நிகழ்வும் நடந்ததுண்டு.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.