Saturday, September 1, 2012

கழிவுநீர் கால்வாய் பணியில் விதிமுறை மீறல்! போக்குவரத்து தடையால் பொது மக்கள் அவதி !



கீழக்கரையில் நகராட்சி சார்பாக வள்ளல் சீதக்காதி சாலை பகுதியில் ரூ 50 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது.இப்பணிக்காக‌ சாலையோரத்தில் ஜேசிபி பயன்படுத்தி பள்ளம் தோண்டப்படுகிறது.இதனால் பி.எஸ்.என்.எல் வயர்கள் அறுபட்டு சுமார் 400க்கு அதிகமான தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் ஜேசிபி வைத்து தோண்டகூடாது என்ற அரசின் விதிமுறையை மீறி செயல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும் எவ்வித முன்னறிவிப்பின்றி போக்கு வரத்து அதிகமுள்ள காலை நேரத்தில் ஜேசிபியை நடுரோட்டில் நிறுத்தி வேலை செய்வதால் அப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த நெய்னார் கூறுகையில் ,

போக்குவரத்து அதிகமில்லாத இரவு நேரத்தில் இப்பணியை மேற்கொள்ளலாம். ஜேசிபி பயன்படுத்தாமல் ஆட்களை பயன்படுத்த வேண்டும்.மேலும் அருகில் அரசு மருத்துவமனை உள்ளதால் இப்பகுதியில் வாகனத்தில் வருபவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.நகராட்சி தலையிட்டு காண்டிராக்டரை கண்டித்து விதிமீறலை தடுக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ஹமீது கான் கூறியதாவது,மழைநீர் வாறுகாலுக்கு பயன்படுத்த வேண்டிய நிதியை கழிவுநீர் கால்வாய்க்கு பயன்படுத்துவது முறையல்ல.மேலும் இந்த காண்டிராக்டர் முற்றிலும் சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படுகிறார் என்றார்.

தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கூறியதாவது ,

நகராட்சியில் இருந்து இப்பணி குறித்து எவ்வித தகவலும் எங்களுக்கு இல்லை.துண்டிக்கப்பட்ட அனைத்து இணைப்புகளும் சரி செய்யப்படும் என்றன‌ர்.



No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.