Friday, September 7, 2012

ஆசிரியர் பற்றாக்குறை!போராட்டத்தில் இறங்கிய பெரியப்பட்டினம் பள்ளி மாணவர்கள்!



வகுப்புகளை புறக்கணித்து

மாணவர்கள் போராட்டம்

பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை


கீழக்கரை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில், பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழக்கரை அருகே பெரியபட்டினத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 1 வகுப்பில் 70 பேர், பிளஸ் 2வில் 55 பேர் என 124 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இந்த வகுப்புகளில் கம்ப்யூட்டர் மற்றும் இயற்பியல் பாடங்கள் நடத்த மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். பிற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.

எனவே போதிய ஆசிரியர்களை நியமிக்க மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். காலாண்டு தேர்வு வருகிற 12ம் தேதி துவங்குகிறது. இந்நிலையிலும், பாடங்களை நடத்த ஆசிரியர்கள் நியமிக்கப்படாததை கண்டித்து நேற்று காலை 10 மணியளவில் மாணவ, மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளஸ் 1 மாணவர் ஆதில், பிளஸ் 2 மாணவர் அன்சாரி ஆகியோர் கூறுகையில், �காலாண்டு தேர்வு நெருங்கும்வேளையில் இதுவரை பாடங்கள் எதையும் நடத்தவில்லை. நாங்கள் எப்படி தேர்வு எழுதப்போகிறோம் எனத் தெரியவில்லை. நிரந்தர தலைமை ஆசிரியரும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகமும் பல ஆண்டாக அமைக்கவில்லை. இந்த மூன்று கோரிக்கைகளை முன்வைத்துதான் வகுப்பு புறக்கணிப்பு நடத்தப்படுகிறது� என்றனர்.

மாணவர்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து மதியம் 12 மணியளவில் ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலர் லத்திகா, பள்ளிக்கு வந்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவின்படி உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்� என்று கூறி மாணவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பினர்.

பெரியபட்டினம் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் சட்டமன்ற தொகுதி தலைவர் பைரோஸ்கான் கூறுகையில், �இந்த கோரிக்கைகளை ஒரு வாரத்திற்குள் அரசு நிறைவேற்றாவிடில் எங்கள் கட்சியும் மாணவர்களுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தும்� என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.