Saturday, September 29, 2012

குடும்ப‌த்தோடு ஏர்வாடி த‌ர்ஹா வ‌ந்த‌ பெண் ராம‌நாத‌புர‌த்தில் ர‌யிலில் அடிப‌ட்டு உயிர‌ழ‌ந்தார்!!

ஏர்வாடி தர்ஹாவிற்கு சென்றுவிட்டு திரும்பி சென்னைப் பெண் ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் ஏற முயன்றபோது அடிபட்டு இறந்தார்.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் அமானுல்லா. இவரது மனைவி ரஹ்மத் நிஷா(40). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ரஹ்மத் நிஷா சற்று மன நிலை பாதிக்கப்பட்டதாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து. அதனால் அமானுல்லா, சென்னையிலிருந்து மனைவி மற்றும் தனது அக்காள் ரஷியா பேகம் ஆகியோரை அழைத்துக் கொண்டு, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள அண்ணன் அஜீஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அஜீஸ், அவரது மனைவி மற்றும் அமனுல்லா, அவரது மனைவி, அக்காள் ஆகிய 5 பேரும், நத்தத்தில் இருந்து ஏர்வாடி தர்ஹா வந்துள்ளனர். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்துள்ள‌ன‌ர்.

நேற்று முன்தினம் நடந்த ஏர்வாடி த‌ர்ஹா கொடியேற்று விழாவில் கலந்து கொண்டுள்ளனர். நேற்று அமானுல்லா குடும்பத்தினர் சென்னை செல்லவும், அஜீஸ் குடும்பத்தினர் மதுரை வழியாக நத்தம் செல்லும் ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளனர்.

நேற்று மாலை 6.20க்கு செல்லும் ராமேஸ்வரம்&சென்னை ரயில் முதல் பிளாட்பாரத்திற்குள் வரும்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறி இடம் பிடிக்க அமானுல்லாவும், அவரது அண்ணனும் வேகமாக சென்றுள்ளனர். அவர்களுக்கு பின்னால் 3 பெண்களும் வந்துகொண்டிருந்தபோது, கூட்டத்தில் திடீரென ரஹ்மத்நிஷா தண்டவாளத்தில் விழுந்தார். பத்து அடி தூரத்தில் ரயில் வந்துவிட்டதால் பலர் கூச்சலிட்டும் ரயிலை நிறுத்த முடியவில்லை. அவர் மீது ரயில் ஏறியதில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்டு ரஹ்மத் நிஷா இறந்தார். தண்டவாளத்தில் விழுந்தவரை காப்பாற்ற முடியாமல் போனதே என அமானுல்லா உட்பட உறவினர்கள் கதறி அழுதனர்.

ராமேஸ்வரத்திலிருந்து ரயில்வே போலீசார் வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதால் 2 மணிநேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட உடல் பிளாட்பாரத்திலேயே கிடந்தது. இதுகுறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராம‌நாத‌புர‌த்தில் ர‌யில் ப‌ய‌ணிக‌ள் கூறிய‌தாவ‌து,
‌ அதிக‌ப்ப‌டியாக‌ ப‌ய‌ணிக‌ள் ஏறுவ‌து ராம‌நாத‌புர‌ம் ர‌யில் நிலைய‌த்தில்தான் ஆனால் மிக‌ குறைந்த‌ நிமிட‌மே ர‌யில் நிறுத்த‌ப்ப‌டுகிற‌து.என‌வே ப‌ய‌ணிக‌ள் அவச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ர‌யிலில் ஏற‌ வேண்டிய‌ சூழ்நிலை ஏற்ப‌டுகிற‌து.என‌வே ர‌யில்வே நிர்வாக‌ம் குறைந்த‌து 10லிருந்து 15 நிமிட‌ங்க‌ளாவ‌து ர‌யிலை நிறுத்தி செல்ல‌ வேண்டும் என‌ ப‌ய‌ணிக‌ள் தெரிவித்த‌தோடு இந்த‌ துய‌ர‌ ச‌ம்ப‌வ‌ம் மிகுந்த‌ வேத‌னைய‌ளிப்ப‌தாக‌ க‌வ‌லை தெரிவித்த‌ன‌ர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.