Tuesday, August 28, 2012
கீழக்கரையில் கந்துவட்டி,கட்டப்பஞ்சாயத்து கும்பல் மீது நடவடிக்கை !காவல்துறை தனிப்பிரிவு ரெடி !
கீழக்கரை பகுதியில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பல் பிடியில் சிக்கி அப்பாவி மக்கள் தவிக்கின்றனர். மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை காவல்துறை ஒடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கபட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
சமீபகாலமாக கீழக்கரை நகரில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பலின் அட்டூழியம் பெருகி வருகிறது. வறுமையில் நலிந்த நடுத்தர குடும்பங்களை குறிவைத்து கடன் தருவதாக கந்துவட்டி கும்பலும், சொத்து தகராறு, பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு போன்ற விவகாரங்களை தேடிப்பிடித்து பிரச்னையை தீர்ப்பதாக கட்டப்பஞ்சாயத்து கும்பலும் களத்தில் இறங்கி கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்விரு கும்பலிடம் சிக்கிக் கொண்டு சொத்து, வீடு, அந்தஸ்தை இழந்து பரிதவிக்கும் அப்பாவிகள் எண்ணிக்கை எகிறிக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில், சில தினங்களுக்கு முன்பு கூட, கீழக்கரையில் ஒரு சம்பவம் நடந்தது. ஓராண்டுக்கு முன்பு ஒருவர், குடும்பச்சூழல் காரணமாக தனது வீட்டை ரூ.2.50 லட்சத்திற்கு கந்துவட்டி கும்பலிடம் அடமானம் வைத்துள்ளார். ஓராண்டு முடிவில் வட்டியுடன் ரூ.3.50 லட்சமாக கடன்தொகை உயர்ந்தது. அதனை கொடுத்து வீட்டை மீட்க முயன்றார் அந்த நபர். வீட்டை கொடுக்க முடியாது என கந்துவட்டி கும்பல் மிரட்டியது. இதனையறிந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல், பாதிக்கப்பட்ட நபரை அணுகி, எங்களுக்கு ரூ.50ஆயிரம் கொடுத்து விடுங்கள். பிரச்னையின்றி வீட்டை மீட்டுத்தருகிறோம் என்றனர். அந்த பணத்தையும் வேறொரு இடத்தில் வட்டிக்கு கடன் வாங்கி கட்டி வீட்டை மீட்டுள்ளார். இதனால் வீட்டு உரிமையாளருக்கு வீட்டை மீட்க ரூ.4 லட்சம் செலவானது. இதுபோன்று வாரம் ஒரு சம்பவம் நடந்து வருகிறது என்றார்.
கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக நிர்வாகி முகைதீன் இப்ராகிம் கூறுகையில், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி கும்பல் ஏதாவ தொரு கட்சியின் பின்புலத்துடன் செயல்படுகின்றன. இவர்களது மிரட்டலால் அப்பாவிகள், போலீசாரிடம் பிரச்னையை கொண்டு செல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கின்றனர். இக்கும்பல்களை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்� என்றார்.
கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர்அப்துல் காதர் கூறுகையில், இதுபோன்ற சமூக விரோதிகளிடம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். கந்துவட்டியை ஒழிக்க நாங்கள் வட்டியில்லா கடன் தருகிறோம். இன்னும் ஏராளமான சேவை அமைப்புகள் கீழக்கரையில், பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு வட்டியில்லா கடன் தருகின்றன. மக்கள் அவற்றை பயன்படுத்திக் கொண்டு கந்து வட்டிக்காரர்களை புறக்கணிக்க வேண்டும். எந்த பிரச்னையையும் சட்டரீதியாக அணுகினால் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும் என்றார்.
கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் கேட்டபோது,
கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து கும்பலை ஒடுக்க தனிப்பிரிவே உள்ளது. இதுதொடர்பாக எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. பாதிக்கப்பட்டோர், யாருக்கும் அஞ்சத்தேவையில்லை. எங்களிடம் புகார் தரலாம். அவர்களது பெயர் விபரம் ரகசியம் காக்கப்படும். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.